மே 31-க்குள் எடுக்கப்படாத ‘ஊதியத்துடன் கூடிய விடுமுறைகளை’ அடுத்த ஆண்டிற்கு மாற்ற முடியுமா? நீங்கள் அறிய வேண்டியவை!

மே 31-க்குள் எடுக்கப்படாத ‘ஊதியத்துடன் கூடிய விடுமுறைகளை’ அடுத்த ஆண்டிற்கு மாற்ற முடியுமா? நீங்கள் அறிய வேண்டியவை!

(பாரிஸ் 06.05.2026 sci )
நீங்கள் தனியார் துறை ஊழியரா? அப்படியானால் இந்தச் செய்தி உங்களுக்கானதுதான். கடந்த ஜூன் 1, 2024 முதல் மே 31, 2025 வரையிலான காலத்தில் நீங்கள் ஈட்டிய ‘ஊதியத்துடன் கூடிய விடுமுறைகளை’ (Congés payés) நடப்பு ஆண்டின் மே 31, 2026-க்குள் நீங்கள் எடுத்தாக வேண்டும். மீதமுள்ள விடுமுறைகளை என்ன செய்வது என்பது குறித்துப் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதோ:

பொதுவாக ஒரு மாத வேலைக்கு 2.5 வேலை நாள்கள் என்ற கணக்கில் ஊழியர்களுக்கு விடுமுறை ஈட்டித் தரப்படுகிறது. முந்தைய ஆண்டின் ஜூன் 1 முதல் நடப்பு ஆண்டின் மே 31 வரையிலான கணக்கீட்டு முறைப்படி, ஈட்டிய விடுமுறைகளை அடுத்த ஆண்டின் மே 31-க்குள் முழுமையாக எடுத்துவிட வேண்டும்.

எடுக்கத் தவறினால் அந்த விடுமுறைகள் தானாகவே ரத்தாகிவிடும், அடுத்த ஆண்டிற்கான கணக்கில் அதனைச் சேர்க்க முடியாது.
(உதாரணம்: மே 31, 2025-க்குள் நீங்கள் 15 நாள்கள் விடுமுறை ஈட்டியுள்ளீர்கள் எனில், அதனை மே 31, 2026-க்குள் எடுத்தாக வேண்டும். நீங்கள் 7 நாள்கள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளீர்கள் என்றால், மீதமுள்ள 8 நாள்கள் ரத்தாகிவிடும்).

விடுமுறையை ஒத்திவைக்க முடியுமா?

எடுக்காத விடுமுறைகளை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க முடியும், ஆனால் அதற்கு உங்கள் நிறுவனரின் (முதலாளியின்) ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. நிறுவனத்தில் அதற்கான சிறப்பொப்பந்தமோ அல்லது வழக்கமான நடைமுறையோ இல்லையென்றால், உங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் நிறுவனத்திற்கு இல்லை.
அதேபோல, நிறுவனம் தாமாக முன்வந்து உங்கள் விடுமுறையை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க விரும்பினாலும், அதற்கு உங்களின் முழுமையான ஒப்புதல் அவசியம்.

எப்போதெல்லாம் ஒத்திவைப்பை உரிமையாகக் கோரலாம்?

சில தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களால் குறிக்கப்பட்ட காலத்திற்குள் விடுமுறை எடுக்க முடியவில்லை என்றால், அதனை அடுத்த ஆண்டிற்கு மாற்றிக்கொள்ளும் முழு உரிமை உங்களுக்கு உண்டு. அவை:

மருத்துவ விடுப்பில் (Sick leave) இருந்திருந்தால்.

மகப்பேறு அல்லது குழந்தைத் தத்தெடுப்பு விடுப்பில் இருந்திருந்தால்.

நிறுவனத்தின் வேலைப்பளு அல்லது நிர்வாகக் காரணங்களுக்காக நிறுவனம் உங்கள் விடுமுறையை மறுத்திருந்தால்.

பிற முக்கிய வழிகாட்டுதல்கள்:

காலக் கணக்குச் சேமிப்பு (Compte épargne-temps – CET): தங்கள் நிறுவனத்தில் இந்தச் சேமிப்பு வசதியைக் கொண்ட ஊழியர்கள், தாங்கள் எடுக்காத விடுமுறை நாள்களை அல்லது ஓய்வு நாள்களை (RTT) இந்தக் கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

துறைசார் ஒப்பந்தங்கள்: அனைத்து நிறுவனங்களுக்கும் ஜூன் முதல் மே வரை கணக்கீட்டுக் காலம் இருக்காது. சில நிறுவனங்கள் மற்றும் துறைகளில் (உதாரணமாகக் கட்டுமானத் துறை அல்லது கலைத்துறை) இந்தக் கணக்கீட்டுக் காலம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையோ, அல்லது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையோ மாறுபடலாம்.

குறிப்பிட்ட நாள்கள் அடிப்படையிலான பணியாளர்கள் (Forfait jours): நாள்கள் அடிப்படையில் வேலை செய்ய ஒப்பந்தம் செய்துள்ள ஊழியர்களுக்கு, அவர்களின் பயன்படுத்தாத விடுமுறையை அடுத்த ஆண்டின் டிசம்பர் 31 வரை ஒத்திவைக்கச் சில நிறுவன ஒப்பந்தங்களில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin