பிரான்ஸ் 2027 குடியரசுத் தலைவர் தேர்தல்: 4-வது முறையாகக் களமிறங்குகிறார் இடதுசாரித் தலைவர் ஜீன்-லூக் மெலன்சோன்!
(பாரிஸ் 03.05.2026 sci )
பிரான்ஸ் நாட்டின் ‘மண்டியிடாத பிரான்ஸ் (La France Insoumise – LFI) கட்சியின் தலைவரான ஜோன்-லூக் மெலன்சோன் (Jean-Luc Mélenchon), வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்துத் தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் அளித்த மெலன்சோன், “நாங்கள் முழுமையாகத் தயாராகிவிட்டோம். எங்களிடம் ஒரு சிறந்த குழு, ஒரு தெளிவான செயல்திட்டம் மற்றும் ஒரேயொரு வேட்பாளர் உள்ளார். ஆம், நான்தான் அந்த வேட்பாளர்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இன்று பாரிஸில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், இவரை எதிர்த்து வேறு எவரும் போட்டியிட முன்வராததால், மெலன்சோனின் பெயர் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், ஏன் இந்த அவசர அறிவிப்பு என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “நாம் உலக வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்திற்குள் நுழைகிறோம். உலகளாவிய போர் மூளும் அபாயம், தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் நம்மை நோக்கி வரும் மிகப்பெரிய சமூகப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். இவற்றைச் சமாளிக்கத் தாமே மிகச் சிறந்த தகுதியுடையவர்” என்றார்.
மெலன்சோன் குடியரசுத் தலைவர் பதவியை நோக்கித் தனது பரப்புரையை முன்னெடுப்பது இது 4-வது முறையாகும் (இதற்கு முன் 2012, 2017 மற்றும் 2022-ல் போட்டியிட்டார்). கடந்த 2022 தேர்தலில், இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற வெறும் 4,20,000 வாக்குகள் மட்டுமே அவருக்குக் குறைவாக இருந்தன.
இம்முறை தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசிய அணி’ (Rassemblement national – RN) தான் தங்களின் முதன்மை எதிரி எனக் குறிப்பிட்ட அவர், அசுர பலத்துடன் திகழும் வலதுசாரிகளை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்துவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த முறையைப் போலவே, விதிமுறைகளின்படி பொதுமக்கள் தரப்பிலிருந்து 1,50,000 பேரின் ஆதரவுக் கையொப்பங்களை அவர் முறைப்படி பெற வேண்டும்.
பாரம்பரியச் செய்தி நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, நவீன ‘எண்ணிம ஊடகங்களை’ (Digital media) மட்டும் உள்ளடக்கிய அவரது முதல் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அவரது முதல் மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் வருகிற ஜூன் 7-ஆம் திகதி ‘சென்ட்-டெனிஸ்’ (Saint-Denis) நகரில் நடைபெற உள்ளது.
74 வயதான மெலன்சோன், கடந்த தேர்தலுக்குப் பிறகு அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கப் போவதாகக் கூறியிருந்தார். ஆயினும், அரசியல் என்பது அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதால் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
தற்போது பிரான்சின் பிற இடதுசாரி அமைப்புகளுக்கு இடையே, பொதுவான ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல்களில் (Primary elections) கடும் குழப்பம் நிலவி வருகிறது. சோசலிசக் கட்சி (Parti socialiste) மற்றும் பிற இடதுசாரித் தலைவர்கள் தங்களின் நிலைப்பாட்டை இன்னும் முடிவெடுக்காமல் திணறி வரும் நிலையில், மெலன்சோன் தனித்துத் தனது வேட்புமனுவை அறிவித்துத் தேர்தல் களத்தில் முந்திக்கொண்டுள்ளார்.

