கொழும்பு கம்பன் விழாவில் அண்ணாமலை: கம்ப இராமாயணத்தின் அறநெறிகள் குறித்து நெகிழ்ச்சி!
இலங்கையின் கொழும்பு நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ‘கம்பன் விழா 2026’ நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவும் கல்ந்துகொண்டு சிறப்ப விருதை பெற்றிருந்தார். தமிழறிஞர்களும் முக்கிய பிரமுகர்களும் சங்கமித்த இந்த விழாவில் கலந்துகொண்டது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.
கம்பனின் காவியமும் தர்மத்தின் பாதையும்:
தலைமுறை தலைமுறையாக அறத்தின் வழிநின்று வழிகாட்டும் உன்னதமான ஞானத்தின் ஊற்றாக இராமாயணம் விளங்குவதாக அண்ணாமலை இதன்போது சுட்டிக்காட்டினார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர், இராமாயணத்தை ஒப்பற்ற இலக்கியச் சுவையுடனும் புனிதத்துடனும் படைத்திருப்பதை வியந்து பாராட்டிய அவர், காலத்தைக் கடந்து நிற்கும் கம்ப இராமாயணத்தின் சிறப்புகளை இத்தகு மேடையில் எண்ணிப்பார்ப்பதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் மொழியின் அழகும் செழுமையும் பொங்கித் ததும்பிய இந்த இனிய மாலைப் பொழுதை ஏற்பாடு செய்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளை அவர் உரித்தாக்கினார்.
பாரதத்திற்கும் இலங்கைக்குமான கலாச்சாரப் பிணைப்பை வலுப்படுத்தும் இத்தகைய இலக்கிய நிகழ்வுகள், தமிழ் மொழியின் பெருமையை உலகளாவிய ரீதியில் பறைசாற்றுவதாக அமைகின்றன.

