பிரான்சில் ‘குடும்ப ஒருங்கிணைவு ‘ குடியேற்றத் திட்டத்தின் 50-வது ஆண்டு: புள்ளிவிவரங்களும் தற்போதைய சர்ச்சைகளும்!
(பாரிஸ் 29.04.2026 SCI)
பிரான்சில் சட்டப்பூர்வமாக வசிக்கும் வெளிநாட்டினர் தங்களது குடும்பத்தினரையும் பிரான்சுக்கு அழைத்து வரும் ‘ஒருங்கிணைவு’ (Regroupement familial) திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் திகதி அப்போதைய பிரதமர் ஜாக் சிராக் (Jacques Chirac) இந்தத் திட்டத்துக்கான அரசாணையில் கையெழுத்திட்டார். அரை நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், தற்போது இந்தத் திட்டம் பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பிரான்சில் சட்ட்டபூர்வமாக வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் மனைவி/கணவன் மற்றும் வயதுக்கு வராத குழந்தைகளைப் பிரான்சுக்கு அழைத்து வர இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இதற்குப் பல கடுமையான நிபந்தனைகள் உள்ளன:
காலவரம்பு: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 மாதங்கள் பிரான்சில் சட்டப்பூர்வமாக வசித்திருக்க வேண்டும்.
வருமானம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, மாதம் 1,823 யூரோக்கள் முதல் 2,187 யூரோக்கள் வரை நிலையான வருமானம் இருக்க வேண்டும். இதில் அரசின் எந்தவொரு சமூக உதவித்தொகையும் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
குடியிருப்பு: அழைத்து வரப்படும் குடும்பம் வசிக்கப் போதுமான அளவிலான, தரமான வீடு இருக்க வேண்டும்.
குடியரசு விழுமியங்கள்: பிரான்ஸ் நாட்டின் அடிப்படைச் சட்டங்களை மதிக்க வேண்டும். உதாரணமாக, ஒருதார மணம் மற்றும் பாலினச் சமத்துவத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவது மனைவியை அழைத்து வரச் சட்டம் அனுமதிக்காது.
விண்ணப்ப நடைமுறை:
தகுதியுடையவர்கள் குடியவரவு மற்றும் ஒருங்கிணைப்புக்கான பிரெஞ்சு அலுவலகத்தில் (OFII) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த இரண்டு மாதங்களுக்குள் உள்ளூர் நகர மேயர், விண்ணப்பதாரரின் வீட்டை நேரில் ஆய்வு செய்வார். பின்னர், மாகாண அதிகாரி (Prefect) ஆறு மாதங்களுக்குள் இந்த விண்ணப்பத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என முடிவெடுப்பார்.
அகதிகளுக்கான ஜெனீவா சடடத்தின் கீழ் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் பிரெஞ்சு குடியரசின் விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும்.மற்றபடி அவர்களுக்கு ‘நிரந்தர வீடு , நிரந்தர வருமானம் காட்ட வேண்டும் ‘என்பது கட்டாயமில்லை
2024 ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 3,44,406 பேர் சட்டப்பூர்வமாகப் பிரான்சிற்குள் நுழைந்துள்ளனர். இதில் குடும்பக் காரணங்களுக்காக வந்தவர்கள் 96,610 பேர். எனினும், வெளிநாட்டினருக்கான ‘குடும்ப இணைப்பு’ திட்டத்தின் கீழ் வந்தவர்கள் வெறும் 16,429 பேர் மட்டுமே. இது மொத்தக் குடும்பக் குடியேற்றத்தில் 13 சதவீதம் மட்டுமே ஆகும்.
2025-ஆம் ஆண்டில் 3.84 லட்சம் பேருக்குப் புதிதாகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11.2 சதவீதம் அதிகமாகும் (பெரும்பாலும் மனிதாபிமான அடிப்படையிலான அகதிகள்). 2026-ல் சட்டப்பூர்வமாக வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தற்போதைய உலகளாவிய குடியேற்ற நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, பிரான்சின் வலதுசாரி அரசியல் கட்சிகள் இந்தத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் அல்லது பெருமளவு குறைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
சமீபத்தில் ஒஸ்ரியா நாடு இது போன்ற குடும்ப இணைப்புக் குடியேற்றங்களுக்குத் தடை விதித்ததை, பிரான்சின் எரிசக்தித்துறை அமைச்சர் மாட் பிரெஜியன் (Maud Bregeon) வரவேற்றுள்ளார். “பிரான்சிலும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த இது போன்ற முன்முயற்சிகளை நாம் பரிசீலிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, 57 சதவீத பிரெஞ்சு மக்கள் இந்த ‘குடும்ப இணைப்பு’ கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

