தாக்குதலால் முடங்கிய சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியது

தாக்குதலால் முடங்கிய சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியது: ‘டோட்டல் எனர்ஜிஸ்’ நிறுவனம் அறிவிப்பு!

பாரிஸ் 29.04.2026 SCI

பிரான்ஸ் நாட்டின் முன்னணி எரிசக்தி நிறுவனமான ‘டோட்டல் எனர்ஜிஸ்’ (TotalEnergies), சவுதி அரேபியாவில் உள்ள தங்களது ‘சடோர்ப்’ (Satorp) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீண்டும் பகுதியளவு செயல்படத் தொடங்கியுள்ளதாகப் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளாவிய எரிபொருள் விலையேற்றத்தால் இந்நிறுவனத்தின் லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சவுதி அரேபியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான ஜுபைல் (Jubail) என்னுமிடத்தில் இந்தப் பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி இந்த ஆலையின் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், ஆலையின் மூன்று முக்கியப் பிரிவுகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதையடுத்து, பாதுகாப்பு கருதி ஆலையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

 

தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், சேதமடையாத மற்ற பிரிவுகளைக் கொண்டு ஏப்ரல் 14-ஆம் திகதி முதல் ஆலை மீண்டும் பகுதியளவு இயங்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு 2,30,000 பீப்பாய்கள் (Barrels) கச்சா எண்ணெய் இங்குச் சுத்திகரிக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான ‘அராம்கோ’ (Aramco – 62.5 சதவீதம்) மற்றும் பிரான்சின் ‘டோட்டல் எனர்ஜிஸ்’ (TotalEnergies – 37.5 சதவீதம்) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பில் இந்த ஆலை இயங்கி வருகிறது.

 

சவுதிப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலை, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.

 

எந்தப் பாதிப்பும் இல்லாத சாதாரண நாட்களில், இதன் முழுமையான சுத்திகரிப்புத் திறன் நாளொன்றுக்கு 4,60,000 பீப்பாய்களாகும். மேலும், ஆண்டுக்குச் சுமார் 2 கோடியே 20 லட்சம் (22 மில்லியன்) டன் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரம்மாண்டத் திறனை இது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin