ஆங்கிலக் கால்வாயில் நடுக்கடலில் தத்தளித்த 119 பேர்: உலங்கு வானூர்தி மூலம் திகில் மீட்பு!
பிரித்தானியாவை நோக்கி மிகவும் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட 119 புலம்பெயர்ந்தோர் நடுக்கடலில் மீட்கப்பட்டுள்ளனர். பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயில் சனிக்கிழமையன்று அடுத்தடுத்து நடந்த இருவேறு சம்பவங்களில் இவர்கள் கடலோரக் காவல் படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதில் மயக்கமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய ஒருவர் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சனிக்கிழமை அதிகாலையில், பிரான்சின் somme ‘ மாகாணத்திற்கு உட்பட்ட கடலோரப் பகுதியில் ஒரு சிறிய படகு தத்தளிப்பதைக் கண்காணிப்புப் படையினர் கண்டறிந்தனர். உடனடியாக விரைந்து சென்ற அவர்கள், அந்தப் படகில் ஆபத்தான நிலையில் இருந்த 6 பேரை மீட்டு Boulogne-sur-Me துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, மற்றொரு படகு வடக்கு நோக்கிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் படகு, விமரூ கடற்கரையில் தங்களை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்தவர்களை ஏற்றிக்கொள்ளக் கரையை நோக்கி வந்தது. கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் இந்த முறையால் அங்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கரையில் இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு அவசரமாகப் படகில் ஏற முயன்றபோது, பலர் தடுமாறிக் கடலில் விழுந்தனர்.
இந்தத் தள்ளுமுள்ளுவில் ஒருவர் கடலில் மூழ்கினார் . நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மீட்புக் குழுவினர், உடனடியாக ஒரு உலங்கு வானூர்தியை (Helicopter) வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியதால் அந்தப் படகின் இயந்திரமும் பழுதாகி நடுக்கடலில் நின்றது. இறுதியில், அதிலிருந்த 112 பேரையும் கடலோரக் காவல் படையினர் மீட்டு கலே துறைமுகத்தில் பாதுகாப்பாக இறக்கிவிட்டனர்.
சட்டவிரோதமான இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுக்கப் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அரசுகள் கடந்த வியாழக்கிழமைதான் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்த இங்கிலாந்து அரசு கூடுதல் நிதியுதவி வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
என்னதான் கடுமையான சட்டங்களும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் வந்தாலும், மக்களின் இந்த அபாயப் பயணம் நின்றபாடில்லை. அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தப் பயணத்தில் 29 பேர் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் சில மாதங்களிலேயே 6 பேர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையும் பாதுகாப்பற்ற சூழலும் இருக்கும் வரை, இத்தகைய துயரப் பயணங்கள் தொடர்கதையாகவே இருக்கும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.

