அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் 8 சிறுவர்கள் உயிரிழப்பு!
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், ஸ்ரீவ்போர்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 10 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் எட்டுச் சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், அங்கிருந்து வாகனத்தை திருடிக்கொண்டு தப்பியோடிய போது, காவற்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளதால், இது குறித்த மேலதிக விசாரணைகளை லூசியானா மாகாணக் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவர்களில் சிலர் அந்தத் துப்பாக்கிதாரிக்கு உறவினர்கள் என ஸ்ரீவ்போர்ட் காவல் நிலையப் பேச்சாளர் கிறிஸ் போர்டெலான் (Chris Bordelon) உறுதிப்படுத்தியுள்ளார்.
“இது நாம் இதுவரை கண்டிராத ஒரு மிக மோசமான துயரச் சம்பவம்” என ஸ்ரீவ்போர்ட் நகர முதல்வர் டாம் ஆர்செனாக்ஸ் (Tom Arceneaux) ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

