பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் விலை உயர்வு: பாரிஸ் விடுமுறைப் பயணங்களுக்கு மத்தியில் 200 ‘டோட்டல்’ எரிபொருள் நிலையங்களில் நாளை வேலைநிறுத்தம்!

பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Ile-de-France) விடுமுறைப் பயணங்கள் தொடங்க உள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 200 ‘டோட்டல்’ (Total) எரிபொருள் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17) மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

 

எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தங்கள் வாகனங்களுக்கான எரிபொருள் செலவைச் சமாளிக்க நிறுவனம் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ‘டோட்டல் எனர்ஜிஸ்’ (TotalEnergies) நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஆர்கெடிஸ்’ (Argedis) ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

 

ஊழியர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாக CGT தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் தூரத்தைப் பொறுத்து மாதம் 15 முதல் 40 யூரோக்கள் வரை ‘எரிபொருள் ஊக்கத்தொகை’ வழங்குவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், இதனை வெறும் “பிச்சை” என விமர்சித்துள்ள தொழிற்சங்கம், நிர்வாகத்தின் சலுகையை நிராகரித்துவிட்டது. “எரிபொருள் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. எனவே, நாங்கள் டோட்டல் நிறுவனத்திடம் உதவி கேட்டோம்; அவர்கள் மறுத்துவிட்டனர். எவ்வளவோ முயன்றும் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” எனச் CGT தொழிற்சங்கப் பிரதிநிதி ஜமிலா தெரிவித்தார்.

 

பிப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கில் தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் டோட்டல் நிறுவனம் தனது நிலையங்களில் எரிபொருள் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயித்தது. விலை குறைவு என்பதால் இந்த நிலையங்களில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தங்களுக்கு வேலைப்பளு பலமடங்கு அதிகரித்துள்ளதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

ஆர்கெடிஸ் நிறுவனத்தின் 80 சதவீத ஊழியர்கள் மாதத்திற்கு 1,600 யூரோக்கள் மட்டுமே நிகர ஊதியமாகப் பெறுகின்றனர். இதில், சிலருக்கு வேலைக்கு வந்து செல்வதற்கான எரிபொருள் செலவே மாதத்திற்கு 400 யூரோக்களைத் தொடுகிறது. இந்த நிதிச்சுமையை இனிமேலும் தாங்க முடியாது என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

பிரான்ஸ் முழுவதும் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக 3,300 எரிபொருள் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆர்கெடிஸ் நிறுவனம் நூறு சதவீதம் டோட்டல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாகும்.

 

நாளை பாரிஸ் மக்கள் பெருமளவில் விடுமுறைப் பயணங்களைத் தொடங்க உள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில் நடக்கும் இந்த வேலைநிறுத்தம் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க டோட்டல் நிர்வாகம் தற்போது மறுத்துவிட்டது.

Recommended For You

About the Author: admin