லெபனான் போர்நிறுத்தம் ஈரானைப் போன்றே முக்கியமானது

லெபனான் போர்நிறுத்தம் ஈரானைப் போன்றே முக்கியமானது: ஈரான் சபாநாயகர் காலிபாப் திட்டவட்டம்:

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் உள்ள நிலையில், லெபனானிலும் நிரந்தர அமைதி திரும்புவதை ஈரான் ஒரு நிபந்தனையாக முன்வைத்துள்ளது.

இது குறித்து லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபீ பெர்ரி (Nabih Berri) உடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், “லெபனானில் போர்நிறுத்தம் ஏற்படுவது ஈரானில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அனைத்து மோதல் வலயங்களிலும், குறிப்பாக லெபனானில் நிரந்தர போர்நிறுத்தத்தை நிலைநிறுத்த ஈரான் தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட “எதிர்ப்பு அச்சின்” (Axis of Resistance) ஒருமைப்பாட்டாலேயே இந்தப் போர்நிறுத்த முயற்சிகள் பலனளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

லெபனான் போர்நிறுத்தமானது ஈரானுடனான உடன்படிக்கையின் ஒரு பிரிக்க முடியாத பகுதி என காலிபாப் எச்சரித்துள்ளார்.

 

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகவே கருதப்படும் என்றும், இதற்கு ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 12 இலட்சத்திற்கும் (1.2 Million) அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக நபீ பெர்ரி கவலை வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் லெபனான் இந்தப் போர்நிறுத்தத்தில் நேரடியாக உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு வரும் சூழலில், ஈரானின் இந்தத் தெளிவான அறிவிப்பு பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. ஏப்ரல் 8-ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தை நீடிக்கவும், லெபனானை இதில் முழுமையாக இணைக்கவும் ஈரான் மற்றும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin