மாதம் ஒரு நாள் இணையத்திற்கு விடுமுறை: இளைஞர்களுக்காக ‘இணையமில்லா தினத்தை’ அறிவித்த பிரான்ஸ் அரசுத்தலைவர் !
இளைய தலைமுறையினரைத் திரைகளின் பிடியிலிருந்து மீட்கும் நோக்கில், மாதத்திற்கு ஒரு நாள் ‘இணையமில்லா தினத்தை’ (journée sans connexion) கடைப்பிடிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
Aisne (02000) மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வில்லர்-கோட்டரெ (Villers-Cotterêts) அரண்மனையில் அமைந்துள்ள ‘பன்னாட்டு பிரெஞ்சு மொழிக் கட்டமைப்பு’ மையத்தைப் பார்வையிடச் சென்றபோது அவர் இந்தச் சிறப்பான கோரிக்கையை முன்வைத்தார்.
சமூக வலைத்தளங்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மக்ரோன் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமுன்வடிவுக்கு ஏற்கனவே ஆதரவளித்திருந்த அவர், தற்போது இந்த இணையமில்லாத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பதின்ம வயது இளைஞர்களிடையே பேசிய அவர், “திரைகளும் சமூக வலைத்தளங்களும் உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கான நேரத்தைத் திருடுகின்றன. நீங்கள் விளையாடுவதற்கும், புத்தகங்கள் வாசிப்பதற்கும் ஒதுக்க வேண்டிய நேரத்தை அவை அபகரித்துக் கொள்கின்றன,” என்று சுட்டிக்காட்டினார்.
இணையப் பயன்பாட்டைக் குறிக்க ‘பார்மகோன்’ (pharmakon) என்ற கிரேக்கச் சொல்லை மக்ரோன் தனது உரையில் பயன்படுத்தினார். “இணையம் ஒருபுறம் கற்பதற்கான கருவியாக, மருந்தாகச் செயல்பட்டாலும், அதைச் சரியாகக் கையாளாவிட்டால் அதுவே உங்களை அடிமையாக்கும் நஞ்சாகவும் மாறிவிடும்,” என அவர் எச்சரித்தார்.
இணையமில்லா உலகத்தின் நிஜமான வாழ்க்கையை இளைஞர்கள் அனுபவிக்க வேண்டும்; அவர்கள் வாசிப்பிலும், விளையாட்டுகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்ரோனின் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அவருடன் நிகழ்வில் பங்கேற்ற பிரெஞ்சு கல்வி அமைச்சர் எட்வார் ஜெஃப்ரே (Édouard Geffray) இதுகுறித்துப் பேசுகையில், “எதிர்வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன,” என்றார்.
ஏற்கனவே பிரான்ஸின் நடுநிலைப் பள்ளிகளில் அலைபேசி பயன்பாட்டிற்குத் தடை உள்ள நிலையில், இது விரைவில் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளில் மட்டுமன்றி, குடும்ப அளவிலும் அனைவரும் ஒன்றிணைந்து நேரத்தைச் செலவிடுவதை ஊக்குவிப்பதே அரசின் இந்த முன்னெடுப்பின் இறுதி இலக்காக அமைந்துள்ளது.
(படம் நன்றி L’union)

