24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! ஈரானிய தூதரக அதிகாரிகளுக்கு கட்டார் அதிரடி உத்தரவு
கட்டாரில் உள்ள ஈரானிய தூதரகத்தின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தூதர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் “விரும்பத்தகாத நபர்கள்” (Persona Non Grata) என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் இப்ராஹிம் யூசிஃப் ஃபக்ரோ மற்றும் ஈரானியத் தூதர் அலி சலேஹாபாதி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற அவசரச் சந்திப்பின் போதே இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.
பிராந்தியத்தைப் பாரிய அழிவை நோக்கி ஈரான் தள்ளுவதாகக் குற்றம் சாட்டியுள்ள கட்டார், ஈரானின் விரோதமான அணுகுமுறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
தமது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, தேவைப்பட்டால் ஈரான் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கட்டார் வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கி வரும் நிலையில், தற்போது கட்டார் எடுத்துள்ள இந்த இராஜதந்திர முடிவு ஈரானைத் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தியுள்ளது.

