மணிக்கு 6.9 லட்சம் கி.மீ வேகம்… சூரியனைத் தொட்ட நாசாவின் பார்க்கர் விண்கலம்!

மணிக்கு 6.9 லட்சம் கி.மீ வேகம்… சூரியனைத் தொட்ட நாசாவின் பார்க்கர் விண்கலம்!

விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப். கடந்த மார்ச் 11 அன்று, சூரியனை மிக நெருக்கத்தில் ஆய்வு செய்யும் தனது 27வது பயணத்தை இந்த விண்கலம் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.

 

சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 6.2 மில்லியன் கி.மீ. தொலைவில் பார்க்கர் விண்கலம் பறந்து சென்றது. கேட்க அதிக தூரம் போலத் தோன்றினாலும், விண்வெளி கணக்குப்படி இது சூரியனை உரசிச் செல்வதற்கு சமம்.

 

பூமி சூரியனில் இருந்து சுமார் 150 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், பார்க்கர் விண்கலமோ சூரியனின் வளிமண்டலமான ‘கொரோனா’ பகுதிக்குள்ளேயே புகுந்து சாதனை படைத்துள்ளது. இந்த விண்கலம் தனது முந்தைய வேக சாதனையான மணிக்கு 6,92,017.92 கிலோமீட்டரை மீண்டும் எட்டியுள்ளது. இந்த வேகத்தில் சென்றால், நீங்க மும்பையிலிருந்து டெல்லிக்கு வெறும் 4 வினாடிகளுக்குள் சென்றுவிட முடியும்.

 

சூரியனுக்கு மிக அருகில் சென்றபோது, அதன் தீவிர வெப்பம் மற்றும் கதிர்வீச்சு காரணமாக பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலம் எவ்வித உதவியும் இன்றி தானாகவே இயங்கிய பார்க்கர், மார்ச் 14 அன்று நான் நலமாக இருக்கிறேன் என ஜான்ஸ் ஹோப் கின்ஸ் ஆய்வகத்திற்கு சிக்னல் (Beacon Signal) அனுப்பி விஞ்ஞானிகளை நிம்மதியடையச் செய்தது. ஆக.2018-ல் ஏவப்பட்ட இந்த கார் அளவிலான விண்கலம், சூரியனைப் பற்றி நாம் இதுவரை அறியாத பல ரகசியங்களை உடைத்து வருகிறது:

 

சூரியனிலிருந்து சீறிப்பாயும் துகள்களை ஆராய்தல், சூரியனின் மேற்பரப்பை விட, அதன் வெளிப்புற வளிமண்டலம் (Corona) ஏன் பல மடங்கு அதிக வெப்பமாக இருக்கிறது என்ற மர்மத்தை அவிழ்த்தல். சூரியனில் ஏற்படும் சீற்றங்கள் பூமியின் மின்சாரக் கட்டமைப்பு, செயற்கைக் கோள்கள் மற்றும் விமானப் போக்குவரத்தைப் பாதிக்கக்கூடும். அவற்றை முன்கூட்டியே கணிக்க இந்தத் தரவுகள் உதவும்.

 

தற்போது சூரியன் தனது சுழற்சியின் உச்சகட்ட செயல்பாட்டில் (Solar Maximum) உள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் பார்க்கர் சேகரித்த அரிய தரவுகள் அனைத்தும், மார்ச் 18 முதல் பூமிக்கு அனுப்பப்பட உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் ‘தலைவனை’ இவ்வளவு நெருக்கத்தில் இருந்து கவனிக்கும் முதல் ‘முன்வரிசைப் பார்வையாளன்’ நமது பார்க்கர் விண்கலம் தான் என்பதில் சந்தேகமில்லை

Recommended For You

About the Author: admin