ஈரானின் புதிய உயரிய தலைவர் (Supreme Leader) முஜ்தபா கமேனி விடுத்த அழைப்பின் பேரில், தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட அல்-குத்ஸ் தின (Al-Quds Day) பேரணியின் போது பல சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
தெஹ்ரானின் மையப்பகுதியான பெர்தௌசி சதுக்கத்தில் (Ferdowsi Square) இந்தப் பேரணி நடைபெற்ற போது பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்தத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, இஸ்ரேலிய இராணுவம் பாரசீக மொழியில் சமூக வலைதளங்கள் வாயிலாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். தாக்குதல் நடந்த போதும் அவர்கள் பின்வாங்காமல் பேரணியைத் தொடர்ந்தனர்.
கடந்த பெப்ரவரி 28 திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய வான்வழித் தாக்குதல்கள் இன்று 14-வது நாளை எட்டியுள்ளன. இந்த மோதலில் இதுவரை ஈரானில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 18,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் போரின் விளைவாக, உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரானின் முன்னாள் உயரிய தலைவர் அலி கமேனி கடந்த பெப்ரவரி மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் முஜ்தபா கமேனி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். “எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈரான் ஒருபோதும் மண்டியிடாது” என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

