பதவியேற்ற 4 நாட்களில் சோகம். கோமாவில் இருக்கும் ஈரானின் புதிய உச்சத் தலைவர்..? ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் உண்மை..!!
முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி மார்ச் 8-ம் தேதி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஈரானில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் பதவியேற்ற பிறகு முதன்முறையாக நேற்று (மார்ச் 12) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து மூடி வைத்து எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், மொஜ்தபா கமேனியின் இந்த உரை நேரடி வீடியோவாகவோ அல்லது ஆடியோவாகவோ வெளியாகவில்லை; மாறாக அவரது புகைப்படம் திரையில் காட்டப்பட, செய்தி வாசிப்பாளர் ஒருவராலேயே அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை குறித்துப் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் நடந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாகவும், அவரது கால் அல்லது முகம் சேதமடைந்துள்ளதாகவும் சில மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிரிட்டிஷ் ஊடகமான ‘தி சன்’ (The Sun), அவர் தனது காலை இழந்துவிட்டதாகவும் தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்திகளை ஈரான் அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஈரானிய அதிபரின் மகன் யூசுப் பெசெஷ்கியன் (Yousef Pezeshkian) உள்ளிட்டோர், மொஜ்தபா கமேனி “பாதுகாப்பாகவும் நலமாகவும்” இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர் போர் சூழல் காரணமாகப் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாகவும், காயங்கள் குறித்து வெளிவரும் செய்திகள் வெறும் வதந்திகள் என்றும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பொதுவெளியில் நேரடியாகத் தோன்றாதவரை இந்த மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.

