இலங்கைக்குக் கடத்த முயன்ற 10 இலட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்:

இலங்கைக்குக் கடத்த முயன்ற 10 இலட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்: தப்பியோடிய கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் இன்று அதிகாலை அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் கியூ பிரிவு (Q Branch) காவல்துறையினா் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று (2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை) அதிகாலை மரைக்காயர் பட்டினம் கடற்கரைப் பகுதியில் முன்னெடுத்த கூட்டுச் சோதனையின் போது இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வருவதைக் கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில், கடற்கரை ஓரம் உள்ள தோப்பு ஒன்றில் சோதனையிட்டபோது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிக்கின.

20,400 வலி நிவாரணி மாத்திரைகள், 4,800வயாகரா மாத்திரைகள் (வெளிநாட்டுத் தயாரிப்பு) , அழகு சாதனப் பொருட்கள், சோப்புகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தவிருந்த படகுடன் கூடிய இரண்டு இயந்திரங்கள் (Engines) என்பனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பு சுமார் 10 இலட்சம் ரூபாயாகும். இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் 17 இலட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, அங்குக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இந்தப் பொருட்கள் கடத்தப்படவிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மண்டபம் மற்றும் மரைக்காயர் பட்டினம் கடற்கரைப்பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால், கடல் வழியாகக் கஞ்சா, போதைப்பொருள், மஞ்சள் மற்றும் மருந்துகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

இது குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்களின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin