கோட்டாபயவின் பாதுகாப்பு வலையத்துள் CIA ஊடுருவியிருந்ததாகஅதிர்ச்சிக் குற்றச்சாட்டு பரபரப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டதாக கூறப்படும் அதிர்ச்சி குற்றச்சாட்டு – சி.ஐ.ஏ. தலையீடு குறித்த வெளிப்பாடு சமூக ஊடகங்களில் பரபரப்பு தொடர்கிறது!
கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தனது பாதுகாப்பு வளையமே அமெரிக்க மத்திய உளவு அமைப்பான சி.ஐ.ஏ. கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக தெரிவித்ததாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிபுணரான Asanga Abeyagoonasekera அண்மையில் யூடியூப் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அசங்க அபேயகுணசேகரர், முன்னாள் அமைச்சர் ஓசி அபேயகுணசேகரரின் மகன். 2015ஆம் ஆண்டு ஐதேக. (UNP) சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், பின்னர் நல்லாட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளராகச் செயல்பட்டார். தற்போது வாஷிங்டனில் இயங்கும் South Asia Foresight Network அமைப்பின் நிறைவேற்று இயக்குநராகவும், Millennium Project இன் மூத்த உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
“என் பாதுகாப்பு வளையம் முழுவதும் சி.ஐ.ஏ. கையில் இருந்தது” என கோட்டாபய ராஜபக்சவே தமக்கு தனிப்பட்ட முறையில் கூறியதாகக் அசங்க கூறும் தகவல் இதுவாகும்:
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமது முழுமையான பாதுகாப்பு வளையம் சி.ஐ.ஏ. கட்டுப்பாட்டில் இருந்தது. சிங்கப்பூருக்கு சென்றபோதும் சி.ஐ.ஏ. முகவர்கள் தன்னை பின்தொடர்ந்தனர். தமக்கு ஜனாதிபதி பதவி இழந்தது கூட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் செயல் திட்டத்தின் விளைவாக இருக்கலாம் என்ற இந்த குற்றச்சாட்டுகள் வெளியான பின்பும் கோட்டாபய ராஜபக்ச இதுவரை பொதுவாக மறுப்பு வெளியிடவில்லை.
இந்த விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவின் (Kamal Gunaratne) பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் சி.ஐ.ஏ. உடன் இணைந்து செயல்பட்டவர் என கோட்டாபய கூறியதாக அசங்க குற்றம் சாட்டுகிறார்.
அதேபோல், முன்னாள் கடற்படை தளபதியும் பின்னர் வெளியுறவு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதி ஆலோசகருமான Jayantha Colombageயும் சி.ஐ.ஏ. உடன் தொடர்பில் இருந்தவர்களில் ஒருவர் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“பாத் ஃபைண்டர்” (Pathfinder Foundation) எனப்படும் சிந்தனை நிறுவனம், மிலிந்த மொறகொட (Milinda Moragoda) தலைமையில் இயங்குகிறது. கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு வளையத்துடன் தொடர்புடைய பலர் இந்த அமைப்புடன் இணைந்திருந்ததாக அசங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 25.02.2026 திகதி கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுரெஸ் சலே (Suresh Sallay) அந்நேரம் பாத் ஃபைண்டர் அமைப்பில் பணியாற்றியதாகவும், சி.ஐ.ஏ. தொடர்பான செயல்பாடுகளை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசங்க அபேயகுணசேகரர் மேலும் கூறுவதாவது – 2029 ஜனாதிபதி தேர்தலுக்காக பொது வேட்பாளராக மிலிந்த மொரகொடவை முன்னிறுத்த எதிர்க்கட்சித் தரப்பில் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன என்பதாகும். மொரகொட அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட அரசியல்வாதி என அறியப்படுகிறார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி குறித்து USAID (அமெரிக்க அபிவிருத்தி முகமை) அமைப்பிற்கு அறிக்கை தயாரிக்க தாம் இணைக்கப்பட்டதாகவும், மணித்தியாலத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெற்றதாகவும் அசங்க தெரிவித்துள்ளார். USAID அமைப்பு, சி.ஐ.ஏ. உடன் தொடர்புடைய அமைப்பாக விமர்சகர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றாலும், இதுவரை இலங்கை பிரதான ஊடகங்களில் விரிவான விவாதம் இடம்பெறவில்லை. ஒரு முன்னாள் ஜனாதிபதி தமது பாதுகாப்பு வளையமே வெளிநாட்டு உளவு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறியிருப்பது உண்மையானால், அது தேசிய பாதுகாப்பு மட்டத்திலான முக்கிய விவகாரமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டவை அல்ல. சம்பந்தப்பட்ட தரப்புகள் இதுவரை விரிவான பதில் அளிக்கவில்லை.

