ஈரான் மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பில்? – அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டு!
ஈரான் நாடு தனது கைவிடப்பட்ட அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களை மீண்டும் இரகசியமாக ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஈரானின் அணுசக்தி நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றாக மறுத்துள்ளது. தமது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதி வழியிலான மின்சாரத் தேவைக்கானது மட்டுமே என ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதத்தை நெருங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என எச்சரித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு போர்ச் சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் கண்காணிப்பாளர்கள் இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஈரான் தனது காவல்துறையினரையும் இராணுவத்தினரையும் குவித்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், வரும் பெப்ரவரி 26ஆம் திகதி ஜெனீவாவில் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பொருளாதாரத் தடைகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் எண்ணெய்ப் விலை மற்றும் டொலர் பெறுமதியிலும் இந்தச் செய்தி தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.


