கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: 26 வரை விளக்கமறியல்!

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: 26 வரை விளக்கமறியல்!

கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த 54 வயதுடைய சட்டத்தரணி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் 1996ஆம் ஆண்டு சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சுமார் 30 ஆண்டுகால அனுபவமுள்ள ஒரு சட்டத்தரணி போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகநபரான சட்டத்தரணியிடமிருந்து 130 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு:
கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (22.02.2026) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin