புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை : 16 வயது சிறுவன் கைது
புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்ற முச்சக்கரவண்டி சாரதி, கடந்த 21ஆம் திகதி இரவு வாடகை பயணம் ஒன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், நேற்று (22) காலை புத்தளம் அடப்பனாவில்லு பகுதியில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், முச்சக்கரவண்டியை கொள்ளையிடும் நோக்கில் சாரதியின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, சடலத்தை வீதியில் தள்ளிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரை புத்தளம் காவல்துறையினர்நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது, சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதும், பணம் மற்றும் வாகனத்தை கொள்ளையிடுவதற்காகவே இக்கொலையைச் செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி முல்லை வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் குறித்து புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

