தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரி கண்ணீர் மல்க உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளாா்

ஒரு தாயின் உருக்கமான வாக்குமூலம் – தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரி கண்ணீர் மல்க உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளாா்

அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது சிறுவனின் தாய், தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரி கண்ணீர் மல்க விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட சிறுவன், தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமையையும் சுமந்த ஒரு தூணாக இருந்துள்ளார் என்பதை அவரது தாய் சுட்டிக்காட்டினார்.

தந்தை மதுவுக்கு அடிமையான நிலையில், 17 வயதேயான இந்தச் சிறுவன் மேசன் வேலை மற்றும் மாட்டெரு விற்பனை செய்து தனது 5 உடன்பிறப்புகளையும் படிக்க வைத்து, குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார்.

“எனது மகன் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபட்டவர் அல்ல. அவருக்கு எதிராக எந்தவொரு காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ வழக்குகள் கிடையாது” என அவர் உறுதிபடக் கூறினார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால், காவல்துறையினா் மறித்தபோது பயத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார். ஆனால், மகன் வாகனத்தை நிறுத்தம் செய்த பின்னரே காவல்துறையினர் சுட்டுள்ளதாகத் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனப் போராட்டக்காரர்களும் சிறுவனின் தாயாரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை உத்தியோகஸ்தர்களைக் கைது செய்யாது, அவர்களைப் பாதுகாக்கப் பல தரப்புகள் முயற்சிப்பதாக அவர் சாடினார்.

இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், ஒருவர் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் மற்றையவர் இன்னும் முன்னிலையாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இது குறித்துப் பேசவில்லை” எனத் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது மகனின் படுகொலைக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

Recommended For You

About the Author: admin