காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரனுக்கு நீதி கோரி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரனுக்கு நீதி கோரி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்களுக்கு நீதி கோரியும், அவரது 19-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் இன்று (பிப்ரவரி 21, 2026) பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையம் முன்பாக உணர்ச்சிப்பூர்வமான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

 

 

வடமராட்சி – கரவெட்டியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான இராமச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

கடந்த 15.02.2007 அன்று, ஊடகவியலாளர் இராமச்சந்திரன் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது

துன்னாலை, கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து அவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

அவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அவர் தொடர்பான எந்தவொரு தகவலையும் அரசு வெளிப்படுத்தவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

பருத்தித்துறை பேருந்து நிலையம் முன்பாக திரண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் முன்வைத்த கோரிக்கைகள்:

 

ஊடகவியலாளர் இராமச்சந்திரனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

 

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ரீதியிலான நீதி வழங்கப்பட வேண்டும்.

 

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும். என்பனவாகும்

 

இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இராமச்சந்திரனின் உருவப்படங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் நின்றனர். “19 ஆண்டுகள் காத்திருந்தும் பதில் இல்லை” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளும் அங்கு காணப்பட்டன.

Recommended For You

About the Author: admin