கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி பணி நீக்கம்:
கடந்த 25ஆம் திகதி மன்னாரிலிருந்து தனங்கிளப்பு வரை சென்ற பேருந்தின் சாரதி, வாகனத்தைச் செலுத்தும்போது தொடர்ந்து கைப்பேசியில் உரையாடியுள்ளார். இது தொடர்பான காணொலி ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர் மறு அறிவித்தல் வரை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பேருந்துச் சாரதி மறு அறிவித்தல் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வீதிப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கடந்த 23ஆம் திகதி மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றாமல் சென்ற பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராகப் பாடசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது. இதனை விசாரித்த அதிகாரிகள், இருவருக்கும் உத்தியோகபூர்வ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்தில் இவ்வாறான விதிமீறல்கள் அல்லது அசௌகரியங்கள் ஏற்பட்டால், பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தயங்காமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் 021-228 5121 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவும் முறைப்பாடுகளை வழங்க முடியும் என அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

