அல் ஜசீராவின் பிரத்தியேகக் கள அறிக்கை:
இஸ்ரேலை உலுக்கும் ஈரானின் புதிய ரக ஏவுகணைகள் –
மில்லியன் கணக்கானோர் பதுங்கு குழிகளில் தஞ்சம்!
ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், கள யதார்த்தம் முற்றிலும் வேறானதாக உள்ளமையை பிரபல சர்வதேச செய்தி ஊடகமான அல் ஜசீரா (Al Jazeera) உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் பல நகரங்களைக் குறிவைத்து ஈரான் இதுவரை கண்டிராத புதிய வகையிலான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருவதாக அல் ஜசீரா தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
புதிய ரக ஆயுதங்கள்: ஈரானிய இராணுவம் தற்போது ‘கிளஸ்டர்’ (Cluster warheads) எனப்படும் கொத்து வெடிகுண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இவை வானில் வைத்துப் பல சிறு குண்டுகளாகச் சிதறி, சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டவையாகும்.
10 கட்டத் தாக்குதல்கள்: இன்று காலை முதல் நண்பகல் வரையான குறுகிய காலப்பகுதிக்குள் மாத்திரம், இஸ்ரேலை நோக்கி 10 தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் (10 separate volleys) ஈரானால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பரந்த தாக்குதல் வலயம்: இஸ்ரேலின் வடக்குக் கடற்கரை நகரமான நெதன்யா (Netanya) முதல் தெற்கே உள்ள நெகேவ் (Negev) பாலைவனம் வரை இந்தத் தாக்குதல்களின் வீச்சு உணரப்பட்டுள்ளது. இதன் வெடிச்சத்தங்கள் அண்டை நாடான பாலஸ்தீனத்தின் ரமல்லா வரையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. போர் தொடங்கியதிலிருந்து இதுவே “மிக மோசமான மற்றும் உக்கிரமான நாள்” என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

