மன்னாரில் கோலாகலமாக நடைபெற்ற சூரியப் பொங்கல் விழா: 5 முன்னோடி உழவர்கள் கௌரவிப்பு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில், தமிழர்களின் பாரம்பரியமான தைப்பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை (19-01-2026) காலை மாவட்டச் செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
மன்னார் மாவட்டத்தின் உணவு உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் விவசாயிகளை மதிக்கும் வகையில், ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் (மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு) தலா ஒரு உழவர் வீதம் 5 முன்னோடி விவசாயிகள் விசேடமாகக் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் தேசிய மட்டத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


