ஜனவரி இறுதியில் கடும் பனிப்பொழிவு : பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையமான Met Office விடுத்துள்ள சமீபத்திய நீண்டகால முன்னறிவிப்பின்படி (ஜனவரி 21 – 30), இந்த மாத இறுதியில் நாடு முழுவதும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
ஜனவரி தொடக்கத்தில் நிலவிய கடும் குளிரைத் தொடர்ந்து, தற்போது நிலவும் ஓரளவு மிதமான வானிலை விரைவில் மாறவுள்ளது. அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று, கிழக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றுடன் மோதும் போது பனிப்பொழிவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 முதல் ஸ்கொட்லாந்தின் வடக்கு பகுதிகளில் பனிப்பொழிவு ஆரம்பமாகும். ஜனவரி 26 முதல் 30 வரையான காலப்பகுதியில் இது லண்டன், பிரைட்டன் மற்றும் பிரிஸ்டல் போன்ற தெற்கு நகரங்களுக்கும் பரவக்கூடும்.
மேலும் சில பகுதிகளில் வெப்பநிலை -10°C முதல் -14°C வரை வீழ்ச்சியடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் பனி மற்றும் பனிமூட்டம் காரணமாக சாலை மற்றும் புகையிரத போக்குவரத்துகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக ‘Storm Goretti’ புயலுக்குப் பிறகு மீண்டும் ஒரு கடுமையான குளிர்காலச் சூழலை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பசிபிக் பகுதியில் நிலவும் ‘லா நினா’ (La Niña) தாக்கத்தினால் இந்த ஆண்டு வழமையை விட அதிக குளிர்கால இடர்பாடுகள் இருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

