சிறையில் சொகுசு வசதி : சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் நவீன மின்னணு சாதனங்கள்
இலங்கையின் வெலிக்கடை சிறைச்சாலையில் (Welikada Prison) முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த வார்டில் இருந்து நவீன கைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைச்சாலைத் திணைக்களம் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது, பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்கியிருந்த அறையில் இந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயர்தர நவீன கைபேசிகள் (Smartphones), சார்ஜர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வார்டில் முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ, எஸ்.எம். ரஞ்சித் மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனங்கள் எவ்வாறு சிறைக்குள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்த அவற்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

