மன்னார் கடற்கரையில் பிளாஸ்டிக் தூவல் அகற்றும் பணி ஆரம்பம்: கேரள கப்பல் விபத்தின் எதிரொலி!

மன்னார் கடற்கரையில் பிளாஸ்டிக் தூவல் அகற்றும் பணி ஆரம்பம்: கேரள கப்பல் விபத்தின் எதிரொலி!

கேரள கடற்பரப்பில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி மூழ்கிய கப்பலில் இருந்து வெளியான பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைத் தணிக்கும் வகையில், கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் பணிகள் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விபத்தின் பின்னணி:

கடந்த மே 25, 2025 அன்று, ‘MSC ELSA 3’ என்ற லைபீரியக் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பல், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. இந்தக் கப்பல் 640 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது. அவற்றில் 13 கொள்கலன்களில் ஆபத்தான பொருட்கள் (கால்சியம் கார்பைட் உட்பட) இருந்தன. அத்துடன், சுமார் 84 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 367 மெட்ரிக் தொன் பர்னஸ் எண்ணெய் ஆகியவையும் கசிந்தன. கப்பலின் சமநிலை அமைப்பில் ஏற்பட்ட கோளாறே மூழ்கலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்து, கடல் சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கப்பலில் இருந்து வெளியான பிளாஸ்டிக் தூவல்கள் (nurdles), கடல் நீரோட்டங்கள் மூலம் இந்தியாவின் கன்னியாகுமரி கடற்கரை மற்றும் இலங்கையின் மன்னார் கடற்கரை வரை பரவியுள்ளன. 2021 இல் இலங்கையில் ஏற்பட்ட X-Press Pearl கப்பல் அனர்த்தத்திற்குப் பிறகு, இது போன்ற ஒரு பிளாஸ்டிக் தூவல் மாசுபாடு மீண்டும் ஒருமுறை சூழலியல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னாரில் துப்புரவுப் பணிகள்:

மன்னார் சௌத்பார், கீரி மற்றும் தாழ்வுப்பாடு கடற்கரைப் பகுதிகளில் நேற்று காலை 11 மணியளவில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில், அப்பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு நாளாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு, அவர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் நடைபெற்ற ஆரம்பகட்டப் பணிகளில், பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப், கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கடல் சூழலையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிளாஸ்டிக் தூவல்கள், மீன் முட்டைகளைப் போன்று தோற்றமளிப்பதால், கடல்வாழ் உயிரினங்களால் உட்கொள்ளப்பட்டு, அவற்றின் செரிமான மண்டலத்தைத் தடுக்கலாம் அல்லது நச்சுப் பொருட்களை வெளியிடலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, இந்த துப்புரவுப் பணிகள் கடல் சூழல் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin