பருத்தித்துறை மீனவர்கள் பாதிப்பு: இந்திய இழுவைமடி மற்றும் சுருக்குவலை மீன்பிடியால் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
யாழ்ப்பாணம், ஜூலை 29, 2025: யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய மீன்பிடி மற்றும் உள்ளூர் சட்டவிரோத சுருக்குவலைத் தொழில் நடவடிக்கைகளால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த சில தினங்களாக பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளதால், நாளாந்தம் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தமது வலைகள் அறுக்கப்பட்டு அழிக்கப்படுவதாகவும், சில வலைகள் காணாமற்போவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றிரவும் (ஜூலை 28) இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியால் பருத்தித்துறைப் பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், உள்ளூரில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் சுருக்குவலைத் தொழில் நடவடிக்கைகளும் தங்கள் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதாக மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், உள்ளூர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பருத்தித்துறை மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

