மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது..!
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில் வைத்து மின்கம்பத்துடன் மோதி சுற்றுலா வந்த பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது.
குருநாகலிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி புல்மோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்ற பேரூந்து சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் நிலைதடுமாறிய பேரூந்து இரண்டு மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனால் மின்கம்பம், மின்சார இணைப்பு வயர்களும் சேதமாகியுள்ளன.
பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.பேருந்தின் சாரதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

