கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவை கூட்டம்..!
கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டமானது இன்றைய தினம் (27.06.2025) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கருத்துத் தெரிவிக்கையில் :
கடந்த ஆண்டு மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் வட்டக்கச்சியில் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அதேபோல இம்முறை நடைபெறவிருக்கும் பண்பாட்டு விழா உரிய காலத்தில் சிறப்புற நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பண்பாட்டுப் பேரவையானது பண்பாட்டு விழாவுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாது துறைசார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பண்பாட்டு மண்டபம் இல்லை. இக்குறைபாட்டை நீக்கும் ஓர் அங்கமாக இரனைமடுவில் இராணுவத்தினர் வசமுள்ள நெலும்பியச மண்டபத்தை கோரியிருக்கின்றோம். அங்கு சில நிகழ்வுகளையும் சிறப்புற நடாத்தியிருக்கிறோம். இது போன்ற கலாசார பெருவிழாவினை அங்கு நடாத்துவதன் ஊடாக சாதகமான பதில்கள் ஏற்படலாம் என சுட்டிக்காட்டிய பதில் அரசாங்க அதிபர் இதற்கு சபையினரின் கருத்துக்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
சபையினரும் இவ்விடயத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கென பண்பாட்டு மண்டபம் அமைவதன் அவசியத்தையும் எடுத்துக் கூறியிருந்தனர். எனவே இம்முறை பண்பாட்டு பெருவிழாவினை குறித்த இடத்தில் ஆகஸ்ட் 22ம் திகதி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழாவினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக கலைஞர் கௌரவிப்பு, விருந்தினர்கள், பண்பாட்டு ஊர்வலங்கள், கலை நிகழ்வுகள் முதலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதனை விட மாவட்ட செயலக இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுவரும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான கலைஞர்களின் விபரத் திரட்டு, கலை மன்றங்கள், ஆலயங்கள், பாரம்பரிய உணவுகள் முதலான விடயங்கள் தொடர்பில் கலைஞர்களுக்கு காண்பிக்கப்பட்டு அவர்களது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் ஹ. சத்தியஜீவிதா, கல்வித்திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், பண்பாட்டுப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள், கலாசார அதிகாரசபை உறுப்பினர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.


