மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் களத்தில்.!
பலத்த மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் அவரது நேரடி கண்காணிப்பில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது கல்முனை, சாய்ந்தமருது , மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை மற்றும் மணற்சேனை போன்ற பிரதேசங்களில் வெள்ள நீரை வேகவாக வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக இருக்கும் கட்டுமானங்களும் வாடிகான்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் அகற்றப்பட்டு சீர் செய்யப்படுகின்றன.
சீரற்ற காலநிலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பெய்து வருகின்ற தொடர்ச்சியான மழை காரணமாக இப்பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டதையடுத்து அன்றைய தினம் முதல் கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை மேற்கொண்டு வந்தது.
சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை மற்றும் பெரிய நீலாவணை பிரதேசங்களில் உள்ள அனைத்து கடற்கரை முகத்துவாரங்களும் அன்றைய தினம் அவசரமாக தோண்டி திறக்கப்பட்டன.
இதன் மூலம் தோணா ஊடாக வெள்ள நீரை கடலுக்கு செலுத்துவதற்கான துரித நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் பல இடங்களிலும் காற்றினால் முறிந்து வீழ்ந்த மரங்களும் மாநகர சபையினால் உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து தடங்கல்களும் அபாய நிலைமைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இன்று மதிய வேளைக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்காக துரித கதியிலான அனர்த்த பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக்களப் பணியில் கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் அவர்களுடன் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் , வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உள்ளிட்ட அதிகாரிகள் அனர்த்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வருகின்றனர்.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையில் கல்முனை மாநகர பிரதேசங்களையும் மக்களையும் பாதுகாப்பதற்காக இரவு பகலாக ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வருகின்ற மாநகர சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்