குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (25) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த நிலை மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரலாம் என வளிமண்டவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். இதனால் குறித்த கடற்பரப்புகளுக்கு இன்று (24) முதல் மறு அறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin