போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான உமேஷ் பால ரவீந்திரன் என்பவரே இந்திய மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2010ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற குறித்த நபர், 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் அரச ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்று கர்நாடகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்திற்குரிய இலங்கையர் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விமான நிலையத்தில் இருந்தபோது, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.