தலைமன்னார் சிறுமி கொலை: சந்தேகநபருக்கு தண்டனை கிடைக்குமா?

தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கிராம மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சிறுமியின் மரணத்திற்கு தாமதம் இன்றி நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரணை செய்யக் கோரியும் ஊர்மனை கிராம மக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கு”, “விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமி”, “சிறுவர்களை உயிர் போல் காப்போம்”, “எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இடம்பெற்ற இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.

சிறுமி அதிகாலை சடலமாக கண்டுபிடிப்பு

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இரவு காணாமல்போன 10 வயது சிறுமி 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு கடந்த 16ஆம் திகதி காலை வருகைத்தந்த மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜெபநேசன் லோகு, பிரேத பிரிசோதனைக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதன் பின்னர் சடலம் பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சடலத்தை, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் புத்தளத்தில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருவதோடு, சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

விளக்கமறியல் நீடிப்பு

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி மொஹமட் சாஜித் இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி சடலமாக கண்டுக்கப்பட்ட இடத்தை அண்மித்து காணப்படும் சிசிடிவி கெமரா காணொளியை அடிப்படிடையாகக் கொண்டு அந்த பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் பணியாற்றும் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin