மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா, தனது கணவரின் மரணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
திங்களன்று வெளியிட்ட ஒரு காணொளி செய்தியில் அவர், தனது பணியைத் தொடரவும், சுதந்திர ரஷ்யாவுக்காகப் போராடவும் சபதம் மேற்கொண்டார்.
மூன்று நாட்களுக்கு முன்பு புடின் அலெக்ஸியை ஏன் கொன்றார் என்பது எங்களுக்குத் தெரியும், அதைப் பற்றி விரைவில் உங்களுக்குச் சொல்வோம்.
அலெக்ஸிக்காகவும் நமக்காகவும் நாம் செய்யக்கூடிய முக்கிய விஷயம் என்னவென்றால், தொடர்ந்து போராடுவதுதான். நான் அலெக்ஸி நவல்னியின் பணியைத் தொடர்வேன், நம் நாட்டிற்காக தொடர்ந்து போராடுவேன்.
ரஷ்ய அதிகாரிகள் நவல்னியின் மரணத்திற்கான காரணத்தை மறைக்கும் முயற்சியில் அவரது உடலை மறைத்து வைத்துள்ளனர் – என்றார்.
நீண்டகால ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியும், கிரெம்ளின் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விமர்சகருமான நவல்னி கடந்த வெள்ளிக்கிழமை தனது 47 வயதில் சிறையில் உயிரிழந்ததாக அரச சிறைத்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், நவல்னியின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ரஷ்யா கூறியுள்ளது.