எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அஞ்ச மாட்டோம்: பணிகள் தொடரும்

அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பொருளாதாரம் சரிவடைந்து கிடந்த நிலையிலேயே நாம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். இரு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையை பலரும் மறந்துவிட்டனர். நாட்டுக்குள் எரிபொருள் வரிசை காணப்பட்டது. எரிவாயுவுக்கு வரிசை காணப்பட்டது. மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.

ஆனால் இன்று நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் இருந்தாலும் அடுத்த நாளை எவ்வாறு கடத்துவது என்ற கேள்விக்குரியான நிலைமை இல்லாமல் போயுள்ளது.

பல்வேறு பொருளாதார மறுசீரமைப்புக்களை நாட்டுக்குள் முன்னெடுத்துள்ளோம். அன்று 5சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை 16 சதவீதமாக அதிகரிக்கும் இயலுமை கிட்டியுள்ளது.

சுற்றுலாத்துறையை நாம் இலகுவாக அபிவிருத்தி செய்யலாம். இன்றளவிலும் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்துள்ளது. 25 இலட்சம் சுற்றுலா பயணிகள் இவ்வருடத்தில் இலங்கைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா அபிவிருத்திக்காக அன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்று பலனளிக்கின்றன. அதனால் அந்நியச் செலாவணியும் அதிகமாக கிடைக்கிறது.

எமது நாட்டின் இளம் சமூகத்தினர் தொழில்நுட்ப துறையில் உயர்வான நிலையில் உள்ளனர். அதனூடான வெளிநாட்டு வருமானத்தைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படுகிறன. எமது நாட்டுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆனால் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியில் நம்பிக்கை இல்லாதபோது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். நாடு மீண்டும் பொருளாதார சரிவைச் சந்திக்க இடமளிக்க கூடாது. எதிர்க்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கள், மக்களுக்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சர்வதேசத்திற்கு எமது நாடு தொடர்பிலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியப்படுகிறது.”என்றார்.

Recommended For You

About the Author: admin