தென்னிந்திய நடிகர் விஜய் இலங்கைக்கு வருகை தருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த செய்தியானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“எனக்கு ஒரு நண்பர் வீடியோ அனுப்பி வைத்து விஜய்க்கு இலங்கையில் ஆபத்து இருப்பதாக கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தால் தமிழர்களை நம்பவைக்கும் வகையில் இலங்கை அரசு சூட்சுமமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அண்யைமில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடந்துமுடிந்த சரிகமபவில் இலங்கைச் சிறுமி கில்மிஷா முதல் பரிசை வென்றார்.
கில்மிஷா இலங்கைக்கு சென்றதும் அவருடன் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
எங்கள் நாட்டில் ஈழ மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.நாங்கள் சுமுகமாகத்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதாகவே இந்த புகைப்படங்கள் சமூக சலைத்தளங்களில் பகிரப்பட்டன. ஆனால் உண்மை நிலைவரம் அவ்வாறில்லை.
ஏற்கனவே வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருவதாக இருந்தார்.ஆனால் அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து வெங்கட் பிரபு இலங்கை வருவதை கைவிட்டார்.
தற்போது விஜய்யை அழைத்துக்கொண்டு வெங்கட் பிரபு இலங்கைக்கு வந்து GOAT படப்பிடிப்பை நடத்துவதாகவும் முக்கியமாக தமிழர்கள் இருக்கும் பகுதியில் படப்பிடிப்பு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு மாத்திரம் நடந்தால் பரவாயில்லை. மாறாக விஜய்யுடன் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துரையாடி புகைப்படங்களை எடுத்துக்கொள்வர்.
இன்று உலகம் முழுவதும் விஜய்க்கென்று தனி மார்க்கெட் இருக்கிறது. அதனால்தான் விஜய்யின் படங்கள் இன்று உலகம் முழுவதும் 200 கோடி ரூபாவை அசால்ட்டாக வசூலிக்கின்றது.
தற்போது விஜய் அரசியலுக்கு வரும் எண்ணத்திலும் இருக்கிறார். இப்படியான சூழலில் இலங்கை அரச தரப்பினர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது இணையத்தில் வெளியாகுமானால் அது ஈழத் தமிழர்களை பகைத்துக்கொள்ளும்படி ஆகிவிடும்.
மேலும் அவரது அரசியல் வருகைக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம்.” என தெரிவித்துள்ளார்.