மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் (NCA) தங்களது பதவிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சியாளர்கள் மூவர் தங்கள் பணியை விட்டு வெளியேறியதாக வியாழன் (18) அன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.
மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நவம்பர் 2023 வரை பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் பதவிகளை வகித்தனர்.
எனினும், 2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கு பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளர் குழுவை அறிமுகப்படுத்தியது, மேலும் ஆர்தர், பிராட்பர்ன் மற்றும் புட்டிக் ஆகியோரை NCA உடன் பணிக்கு மாற்றியது.
2023 ஏப்ரல் மாதம் ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். முன்பு 2016 முதல் 2019 வரை தலைமை பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.
அதேநேரத்தில் பிராட்பர்ன், புட்டிக் ஆகியோர் முறையே தலைமை பயிற்சியாளர் மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் மூவரும் 2024 ஜனவரி இறுதிக்குள் குறித்த பதவிகளை விட்டு வெளியேறுவதற்கான முடிவினை அறிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.