யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதான உழவரான திருச்செல்வம் என்பவர் 1550 கிலோ எடையுள்ள பார ஊர்தியை கயிற்றினால் தலை முடியில் கட்டி தொடர்ந்து 1500 மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார்.
இந்த நிகழ்வு சாவகச்சேரி பேருந்து நிலையம் அமைந்துள்ள சாலையில் ஏராளமான பொது மக்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முயற்சியை நேரில் கண்காணித்து, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்டத் தலைவர் ராசதுரை ஜெயசுதர்சன் ஆகியோர் உறுதி செய்தார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த திருச்செல்வம் அவர்களுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம் என்பன வழங்கப்பட்டன.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சாந்தாதேவி தர்மரத்தினம், சமூக சேவகர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, சாவகச்சேரி பொலிஸ் பொருப்பதிகாரி பாலித செனவிரட்ன, தென்மராட்சி அபிவிருத்திக் கழகத் தலைவர் அ.கயிலாயம்பிள்ளை, பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் க.வேலாயுதம்பிள்ளை, பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் தி.தங்கவேலு போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.
சோழன் உலக சாதனை படைத்த செல்லையா திருச்செல்வம் அவர்களை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் தொலைபேசி ஊடாக அழைத்துப் பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.