‘அவலோகிதேஸ்வர போதிசத்வா’ என்று தன்னை அடையாளப்படுத்தி, சர்ச்சைக்குரிய போதனைகளை நடத்தி வந்த மஹிந்த கொடித்துவக்கு என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சற்று முன்னர் கொழும்பு, பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தீவிர விசாரணையினை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
பௌத்த போதனைகளுக்கு முரணாக மதச்சார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கொடிதுவாக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (12) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றமும் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தது.
குறித்த நபர், தான் மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என்றும் யாருக்கும் திறக்க முடியாத அனைத்து மதங்களுக்கும் பொதுவான கடவுளின் கதவினை தான் திறந்ததாகவும், இதனை செய்ய இயேசுநாதருக்கும் நபிகள் நாயகத்துக்கும் அல்லாஹ்க்கும் முடியாமல் போனது எனவும் இவை அனைத்திற்கும் தன்னிடம் பதில்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இவரது கருத்துக்கள் மதங்களை நிந்திக்கும் வகையில் அமைந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.