காசா போர் நெருக்கடி குறித்து ஒரு பாரிய அளவிலான உத்தியோகப்பூர்வ அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
காசா மோதல் தீவிரமடைந்து செங்கடல் பகுதி தற்சமயம் முக்கிய புள்ளியாக மாறியுள்ளமையினால் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய அமைதி மாநாடு மற்றும் இரு நாடுகளின் தீர்வை செயல்படுத்துவதற்கான கால அட்டவணைக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அழைப்பு விடுத்தார்.
வார இறுதியில் கெய்ரோவில் நடைபெற்ற எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரியுடன் பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, மத்திய கிழக்கில் உள்ள நியாயமான விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கோரினார்.
இதனிடையே, ஹமாஸ் போராளி குழு மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளின் காணொளியை ஒளிபரப்பியது மற்றும் அவர்கள் தொடர்பான அடுத்த கட்ட நகர்வு திங்களன்று (15) வெளியிடப்படும் என்றும் கூறியது.
காசாவில் மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை சிறைப்பிடித்து வைத்திருப்பதைக் காட்டும் காணொளியை ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் ஒளிபரப்பியது.
மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவிற்கு எதிரான தாக்குதலை நிறுத்தினல் அவர்களை விடுதலை செய்வோம் என்று இஸ்ரேலிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது.
எல்லை தாண்டிய ஹமாஸின் தாக்குதல்களினால் சுமார் 240 பேர் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அவர்களில் பாதி பேர் நவம்பர் போர் நிறுத்தத்தில் விடுவிக்கப்பட்டனர்.
132 பேர் காசாவில் தங்கியிருப்பதாகவும் அவர்களில் 25 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். ஹமாஸின் ஒக்டோபர் 7 தாக்குதலில் 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
அதேநேரம், இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 24,000 பேர் கொல்லப்பட்டதாகவும், 60,000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது