புதிய மீனவ கொள்கை வரைபுக்கு எதிராகவும், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வட மாகாண கடற்றொழிலாளர்கள் கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட மீனவர்களின் ஏற்பாட்டில்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து குறித்த கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
“புதிய கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்க வேண்டும், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை நிறுத்த வேண்டும், கடல் உணவு இறக்குமதியால் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை நிறுத்த வேண்டும், கடற்றொழில் சமூகத்திற்கு 2024க்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையையும் பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றியமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைமடி படகுகளால் பாதிக்கப்பட்டுவரும் வட இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை வழங்க வேண்டும்” ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கையொப்ப வேட்டை இடம்பெற்று வருகிறது.
மேலும், கடந்த பல வருடங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் 19 நெருக்கடி கடற்றொழில் சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது.
இவ்வாறான துயருக்கு மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை மேலும் பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி எமது சமூகத்திற்கு விடிவினை வழங்கவேண்டும்.
குறித்த கையொப்பம் அடங்கிய மகஜர் ஒன்றும் ‘இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு’ எனும் தலைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.