“நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும். நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் உண்டு. ஆனால், என்னைப் பொருத்தவரை நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும்”
முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய யாழ். ஊடக அமையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அடுத்த வருடம் நிச்சயமாக நான்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை நடத்தியேயாக வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் நான்கு தேர்தல்களும் கட்டாயம் நடத்தப்பட வேண்டியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்,மாகாண சபைத் தேர்தல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.
அடுத்த முறை தேர்தல்கள் நடைபெறும் போது மக்களை நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அதாவது கௌரவமானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் சிறந்த பாராளுமன்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் நிச்சயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்துடன் தான் சமூக நீதிக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.
நான் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படவில்லை. ஆனால், அரசாங்கம் செய்யும் சில நல்ல செயற்பாடுகளை ஆதரிக்கின்றேன்.
அரசாங்கம் விடும் தவறுகளை திருத்துமாறு அழுத்தங்களை கொடுத்து வருகின்றேன். நான் இதை ஒட்டுமொத்த மக்களுக்கும்தான் கூறுகின்றேன். இனவாதிகளையும் சமூகங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் பிளவுகளை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வுகளை தூண்டுபவர்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யாதீர்கள். அவர்களை நிராகரியுங்கள். இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் கூறுகின்றேன். நல்லவர்களைத் தெரிவு செய்யுங்கள். நல்லவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள். கௌரவ உறுப்பினர்கள் என்று அழைக்கக் கூடியவர்களை கௌரவமான பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறானவர்களையே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றேன்.
குருந்தூர்மலை தொடர்பான சர்ச்சைக்கு ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இப்பிரதேசம்
தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அது தற்பொழுது தொல்லியல் திணைக்களத்தின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற குறித்த சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தனிப்பட்ட ரீதியில் நான் தலையிட்டு அப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இப் பிரச்சினை காரணமாக நாடளாவிய ரீதியில் ரத்த ஆறு ஓடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
நீண்ட கால இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமான பெரும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
பௌத்த தேரர்கள், ஏனைய வணக்க குருமார்கள், துறைசார் அமைச்சுக்களின் செயலாளர்கள், நீதித்துறை சார்ந்தவர்கள், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களுடன் பேசி நாங்கள் ஒரு தீர்வுக்கு வந்துள்ளோம். அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் இணைந்து தான் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தொல்லியல் திணைக்களம் ஒரு இனத்துக்குரியது அல்ல.எல்லா இனத்திற்கும் பொதுவானது தான் தொல்லியல் திணைக்களம். குருந்தூர்மலை விவகாரத்துக்கு தீர்வு காணும் நோக்கில் சர்ச்சைக்குரிய பகுதியை விட்டு இருதரப்பிற்கும் ஒவ்வொரு ஏக்கர் காணி வழங்க நாங்கள் தீர்மானித்து அதற்கு இணக்கமும் காணப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பௌத்த விகாரைக்கும் ஒரு ஏக்கர் இந்து ஆலயம் அமைக்கவும் வழங்கப்பட்டுள்ளது.
நான் தனிப்பட்ட ரீதியில் தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இப் பிரச்சினையால் பெரும் யுத்தம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. இது ஒரு பெரிய மோதலாக வெடிக்கப் போகின்றது – ரத்த வெள்ளம் ஏற்படப் போகின்றது என்பதை உணர்ந்து – நாம் விரைவாக செயல்பட்டு இவ்வாறு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம்.
ஆகவே, இனவாதிகள் ஒரு சிலர் தான். இந்த நாட்டிலுள்ள அதிகமானவர்கள் இனவாதிகள் அல்லர். ஆனால், அவர்களின் குரல் மேலோங்குவதில்லை. இனவாதிகளின் குரல் தான் மேலோங்கி நிற்கின்றது. இனவாதிகள் அதற்கான பரப்புரைகளில் கூடுதலாக ஈடுபடுகின்றனர். நான் சுதந்திரத்துக்கு முன்னர் பிறந்தவன். இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தன்று ( 1948 ஆம் ஆண்டு) நான் தேசிய கொடியை ஏந்தி நின்றேன். அவ்வாறு நின்ற நபர் என்ற ரீதியில் இந்த நாட்டில் ஒற்றுமையை விரும்புகின்றேன். குருந்தூர் மலை விவகாரத்தில் நான் எடுத்த முயற்சிகளுக்கு அனைத்து கட்சிகளும் இணக்கப் பாட்டுக்கு வந்துள்ளனர்.
குருந்தூர்மலை விகாராதிபதி இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவர் இதிலிருந்து விலகியுள்ளார்.
என்னுடைய தலையீட்டின் பிரகாரமே இந்நாட்டில் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் குறித்த விவகாரத்தில் இருந்து விலகியுள்ளார்.
ஆனால், நீதிமன்றத்தின் வழக்கு விவகாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய பிரதேசத்துக்குள் சென்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தான் இப்பொழுது தீர்வு காணப்பட்டுள்ளது.தேரர் தற்பொழுது பூரணமாக அதிலிருந்து விலகி இருக்கின்றார். தொல்லியல் திணைக்களத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் குறித்து பிரதேசம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
குருந்தூர் மலை தொடர்ந்து தொல்பொருள் ஆராய்ச்சி பிரதேசமாக இருக்கும்.தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வெளியே இரு தரப்பிற்கும் ஒவ்வொரு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
பொலனருவை, கண்டி இராசதானியை எடுத்துக்கொண்டால் அங்கு இந்து ஆலயமும் பௌத்த விகாரையும் ஒன்றாக இருக்கின்றன. அவ்வாறு இரண்டும் ஒன்றாக இருப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.
குருந்தூர்மலை விகாரையில் வழிபாடு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் வழிபாடுகளில் ஈடுபட முடியாது – என்றார்.