ரஷ்யாவின் தாதர்ஸ்தான் பிராந்தியத்தில் உள்ள பாரிய எண்ணெய் விநியோக நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் தாதர்ஸ்தான் பிராந்தியத்தில் உள்ள பாரிய எண்ணெய் விநியோக நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் தாதர்ஸ்தான் (Tatarstan) குடியரசில் அமைந்துள்ள ‘கலெய்கினோ’ (Kaleykino LPDS) எண்ணெய் இறைக்கும் நிலையம் (Oil Pumping Station) மீது உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக மையங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிலையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுக் கரும்புகை வெளியேறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் (Exilenova+ கண்காணிப்புத் தளம் ஊடாக) பரவி வருகின்றன.

 

உள்ளூர் அதிகாரிகள் எண்ணெய் சேமிப்புத் தாங்கிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள போதிலும், உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, உக்ரைன் தரப்பிலிருந்து இத்தாக்குதல் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்விதக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

 

ரஷ்யாவின் ‘டிரான்ஸ்நெஃப்ட்’ (Transneft) நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் கலெய்கினோ எண்ணெய் நிலையம், அல்மெட்டியெவ்ஸ்க் (Almetyevsk) நகருக்கு அருகில், உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

 

மேற்கு சைபீரியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்படும் கச்சா எண்ணெயைச் சேகரித்து, ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் ஏற்றுமதி குழாய்களுக்கும் விநியோகிக்கும் முக்கிய கேந்திர நிலையமாக இது செயற்படுகின்றது.

 

இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதியும் இதே எண்ணெய் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin