பிரான்சில் மீண்டும் கடும் குளிர்:

பிரான்சில் மீண்டும் கடும் குளிர்:

அடுத்த வாரம் -2°C வரை வெப்பநிலை வீழ்ச்சி – எந்தெந்தப் பகுதிகளில் உறைபனி?

தடித்த குளிர்கால மேலங்கிகளை (manteaux) மீண்டும் வெளியே எடுக்கவும், வாகனங்களின் கண்ணாடிகளில் படியும் பனியை அகற்றவும் தயாராகுங்கள்! இந்த வார இறுதிக்குப் பின்னர்,

எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 23) முதல் பிரான்ஸ் முழுவதும் வெப்பநிலை சடுதியாகக் குறையவுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடைந்து, பல பிராந்தியங்களில் பூஜ்ஜியத்திற்கும் கீழ் செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

வடக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் உயர் அழுத்த மண்டலம்:

 

வடக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் உயர் அழுத்த மண்டலம் (anticyclone) எதிர்வரும் திங்கட்கிழமை முதலில் பிரித்தானியத் தீவுகள் மற்றும் வட கடல் பகுதியில் நிலைகொள்ளும்.

 

இது நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்சின் வடகிழக்குப் பகுதிகளில் குளிரான வடக்குக் காற்றை வீசச் செய்யும் . இதன்படி, திங்கட்கிழமை வடகிழக்குப் பிரான்சில்—நோர்மந்தியின் மேற்பகுதி முதல் புர்கோன்-பிரான்ஷ்-கொம்தே (Bourgogne-Franche-Comté) வரை—வெப்பநிலை 0°C முதல் 2°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உச்சக்கட்டக் குளிர்:

 

இந்தக் குளிர் அலையின் தாக்கம் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உச்சத்தை எட்டும். உயர் அழுத்த மண்டலம் ஜேர்மனி மற்றும் மத்திய ஐரோப்பாவை நோக்கி நகர்வதால், பிரான்சில் வெப்பநிலை மேலும் சரியும்.

 

வடகிழக்குப் பிரான்ஸ் மற்றும் புர்கோன் (Bourgogne) பகுதிகளில் வெப்பநிலை -2°C வரை குறையக்கூடும்.

 

ரோன் பள்ளத்தாக்கு (Vallée du Rhône) மற்றும் மாசிஃப் சென்ட்ரல் (Massif central) உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 0°C மற்றும் அதற்குக் கீழ் செல்லும்.

 

பிரான்சின் ஏனைய பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி (brume et brouillard) நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வார இறுதியில் மீண்டும் வெப்பநிலை உயரும்:

 

நவம்பர் 25 ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த உயர் அழுத்த மண்டலம் கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நகரத் தொடங்கும். அதேவேளை, கஸ்கோன் விரிகுடாவில் (golfe de Gascogne) உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தென்கிழக்குக் காற்று வீசத் தொடங்கும்.

 

இதனால் புதன்கிழமை முதல் புதிய ‘மத்தியதரைக் கடல் வானிலை நிகழ்வு’ (épisode méditerranéen) உருவாகி நவம்பர் 28 வரை நீடிக்கக்கூடும் . இதனைத் தொடர்ந்து, அடுத்த வார இறுதியில் வெப்பநிலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin