ஐரோப்பாவில் பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள்!!
இத்தாலியில் 300 பாடசாலைகள் வெளியேற்றம் – பிரித்தானியாவிலும் தீவிர விசாரணை!
இத்தாலி முழுவதும் சுமார் 300 பாடசாலைகளுக்கு ஒரே விதமான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததை அடுத்து,
மாணவர்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என இத்தாலியக் கல்வி அமைச்சர் கியூசெப்பே வால்டிதாரா (Giuseppe Valditara) உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ரோம் நகரில் உள்ள ஒரு பாடசாலை பெற்றோர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், “நாடு தழுவிய வெடிகுண்டு எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களின் பாதுகாப்புக் கண்காணிப்புடன் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மிரட்டல் மின்னஞ்சலானது “மிக்கைல் ஆண்ட்ரோபோவ், விலாயத் ஒப் மிசோகினிஸ்தானின் தலைவர்” (Mikhail Andropov, leader of the Vilayat of Misoginistan) என்பவரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை அயர்லாந்து மற்றும் பல்கேரியாவின் செய்தி அறைகளுக்கு (Newsrooms) அனுப்பப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் இவரே உரிமை கோரியிருந்தார்.
இவ்வளவு அதிகளவிலான பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதே, இம் மிரட்டலில் நம்பகத்தன்மை மிகக் குறைவாகவே உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது என அந்நாட்டுக் கல்வி அமைச்சர் வால்டிதாரா குறிப்பிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ரோம் நகரக் காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதேபோன்று, இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானியாவின் பல பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரியான அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன:
நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு இவ்வாறான மிரட்டல்கள் அனுப்பப்பட்டதை அடுத்து, வடக்கு அயர்லாந்து காவற்துறையினர் (PSNI) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மாதம் சுமார் 300 பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட போலி மிரட்டல்களுடன் (Hoax threats) இது ஒற்றுமையைக் கொண்டுள்ளதாகக் கல்வி அதிகார சபை (EA) தெரிவித்துள்ளது. காவற்துறை அறிவுறுத்தும் வரை பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்குமாறு கல்வித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் செய்திகள் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவை வெறும் “வதந்திகள்/போலி மிரட்டல்கள்” (Hoaxes) என்ற அடிப்படையில் கையாளப்பட்டு வருவதாக ஸ்காட்லாந்து காவற்துறை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அண்மைய வாரங்களாக பல்பொருள் அங்காடிகள், இரத்த வங்கிகள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களைக் குறிவைத்து
முன்னெடுக்கப்பட்டு வரும் கலப்பினப் போர் (Hybrid warfare) அச்சுறுத்தல்கள் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள சூழலிலேயே, பாடசாலைகளைக் குறிவைத்து இந்த போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

