பிரான்ஸ் பிரதமரின் பேச்சுவார்த்தை தோல்வி! 

பிரான்ஸ் பிரதமரின் பேச்சுவார்த்தை தோல்வி!

கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராகப் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனத் எச்சரிக்கை!

பிரான்ஸில் உயர்கல்வி நுழைவுக்கான ‘Parcoursup’ முறை மாற்றம் மற்றும் பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ளது.

அரசாங்கம் சில சலுகைகளையும் Parcoursup அமைப்பை மாற்றியமைப்பதாக வாக்குறுதிகளையும் அளித்த போதிலும், அதை நிராகரித்த மாணவர் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

நாடு முழுவதிலும் உள்ள 3,700 உயர்நிலைப் பள்ளிகளில் 49 பள்ளிகளின் நுழைவுவாயில்களை மாணவர்கள் மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உட்பட பல நகரங்களில் பள்ளி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

 

பாரிஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தீவிர வலதுசாரி மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்புகளும் ஆசிரியர் சங்கங்களும் வெளிநடப்பு செய்தன.

 

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பிரான்ஸின் முக்கிய தொழிற்சங்கங்களான CGT மற்றும் FO ஆகியவற்றுடன் இணைந்து ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்று வீதிகளில் பேரணி நடத்தினர்.

 

“நாங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்காக மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் பணிச்சூழலை மேம்படுத்தவும் சேர்த்தே போராடுகிறோம்” என ‘Union syndicale lycéenne’ மாணவர் சங்கத்தின் தலைவர் ரியாத் ராணி தெரிவித்துள்ளார்.

 

பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றபோதிலும், பாரிஸின் கிழக்கே உள்ள செய்ன்-எட்-மார்ன் பகுதியிலுள்ள பள்ளிகளில் பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

 

இந்த வன்முறைச் சம்பவத்தில் இரு மாணவர்கள் காயமடைந்ததுடன், லீ ஹாவ்ரே மற்றும் ரூவன் பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்ட 5 பேரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளிகளுக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையின் கண்காணிப்புடன் கூடிய பேரணிகளை நடத்துவதாக ஆசிரியர்கள் சங்கம் (Snes-FSU) அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் மாணவர் தலைவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin