28 ஆண்டுகள்… 50,000 கிலோமீற்றர்… நடந்தே சொந்த நாடு திரும்பிய மனிதர்!

28 ஆண்டுகள்… 50,000 கிலோமீற்றர்… நடந்தே சொந்த நாடு திரும்பிய மனிதர்! உலகையே வியக்க வைத்த கார்ல் புஷ்பியின் சாதனை!

1998ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடான சிலியின் தென்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த பிரித்தானியாவைச் சேர்ந்த கார்ல் புஷ்பி, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது சொந்த நாடான இங்கிலாந்தைச் சென்றடைந்துள்ளார்.

தற்போது 57 வயதாகும் கார்ல் புஷ்பி, தனது 28ஆவது வயதில் இந்தப் பிரம்மாண்டமான பயணத்தை ஆரம்பித்தார்.

போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்திப் பயணிக்கக்கூடாது, சொந்த ஊருக்குத் திரும்பும் வரை வீட்டுக்குச் செல்லக்கூடாது என இரண்டு கடுமையான விதிகளைத் தனக்குத்தானே விதித்துக்கொண்டார்.

அதன்படி, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா என நான்கு கண்டங்களைக் கடந்து சுமார் 50,000 கிலோமீற்றர் தூரத்தை அவர் கடந்துள்ளார்.

இந்தப் பயணத்தில் சுமார் 30 நாடுகளைக் கடந்து சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தின்போது பல்வேறு சவால்களையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.

குறிப்பாக, கொலம்பியா மற்றும் பனாமா இடையிலுள்ள அடர்ந்த டேரியன் காடுகளைக் கடந்தது, அலாஸ்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பெரிங் நீரிணையைக் கடந்தது போன்றவை அவரது பயணத்தின் மிக முக்கியமான கட்டங்களாக அமைந்தன.

மேலும், ரஷ்யாவுக்கான விசா கட்டுப்பாடுகள், நிதிப் பற்றாக்குறை, கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பயணத் தடைகள் எனப் பல காரணங்களால் அவரது பயணம் பல ஆண்டுகள் தாமதமடைந்தது.

2024ஆம் ஆண்டு காஸ்பியன் கடலை நீந்திக் கடந்த அவர், 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவைச் சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 2ஆம் திகதி இங்கிலாந்தின் ஹல் (Hull) நகரைச் சென்றடைந்த அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

28 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாயார் ஏஞ்சலாவைச் சந்தித்த அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானதாக அமைந்தது.

தனது சாதனைக்குப் பின்னால் உலகம் முழுவதிலுமுள்ள பலரின் உதவியும் ஆதரவும் இருப்பதாகக் குறிப்பிட்ட கார்ல் புஷ்பி, இது தனி மனிதனின் வெற்றி மட்டுமல்ல, உலகளாவிய ஆதரவின் வெற்றியும் எனத் தெரிவித்துள்ளார்.

சுமார் 28 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் பயணம், மனிதனின் விடாமுயற்சி, மன உறுதி மற்றும் இலட்சியத்தின் மீதான அர்ப்பணிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

ஒரு மனிதனின் இலட்சியம் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் நனவாகியுள்ளது!

இந்தச் சாதனை குறித்து உங்கள் கருத்து என்ன?

Recommended For You

About the Author: admin