ஹஜ் கனவை நிறைவேற்ற பெர்லினிலிருந்து மக்கா வரை கால்நடைப் பயணம்!
88 நாட்களாகத் தொடரும் ஜெர்மானிய முஸ்லிமின் நெகிழ்ச்சியான பயணம்!
ஜெர்மனியைச் சேர்ந்த இஸ்லாத்தைத் தழுவிய ஆண்ட்ரியாஸ் லெம்கே (Andreas Lemke), தனது வாழ்நாள் கனவான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவதற்காக ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து சவூதி அரேபியாவின் புனித நகரான மக்கா நோக்கிக் கால்நடைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் உமர் என்ற பெயரை ஏற்றுக்கொண்ட அவர், சுமார் 88 நாட்கள் தொடர்ந்து பயணித்து துருக்கியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாபாஸ்கி நகரைச் சென்றடைந்துள்ளார்.
அங்கு அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்துவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் தனது பயணத்தைச் சிறிது நேரம் இடைநிறுத்தியுள்ளார்.
நம்பிக்கை, பொறுமை மற்றும் உறுதியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த நீண்ட பயணத்தின் ஊடாக, இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குள் புனித மக்கா நகரைச் சென்றடைய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனது வாழ்நாள் கனவை நனவாக்க ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் கால்நடையாகப் பயணிக்கும் உமரின் முயற்சி சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

