பிரான்சில் தஞ்சம் கோருவோரை அச்சுறுத்திய பிரித்தானியர்கள் நாடு கடத்தல்:
கண்ணீர்ப்புகைக் குண்டுகளுடன் கைதான ஐந்து பேருக்குத் தடை!
பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) பகுதியில் தஞ்சம் கோருவோரை அச்சுறுத்தும் நோக்கில் ‘போர்ப் பேருந்து’ (Battle Bus) போன்ற வாகனத்தில்
பயணித்த ஐந்து பிரித்தானிய பிரஜைகளை பிரெஞ்சு காவற்துறையினர் கைது செய்து, பிரித்தானியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் (Tear gas bombs) கைப்பற்றப்பட்டதாக பிரெஞ்சு காவற்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு பிரான்ஸ் பகுதிக்குள் நுழைவதற்கு இவர்களுக்கு ஆறு மாத காலத் தடையும், தஞ்சம் கோருவோருக்கான உதவி அமைப்பு ஒன்றுக்கு தலா €500 நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த அந்த நபர்கள் சமூக வலைத்தளங்களில் நேரலை செய்தவாறு துறைமுகப் பகுதியில் காத்திருந்த தஞ்சம் கோருவோரை அச்சுறுத்தியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தஞ்சம் கோருவோரை அச்சுறுத்தி ஆற்றில் தள்ளிவிடுவதாக மிரட்டியபோது, அங்கிருந்தவர்கள் எதிர்த்து நின்றதால் அவர் அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வன்முறையைத் தூண்டும் குழுவில் அங்கம் வகித்தமை மற்றும் உரிய அனுமதியின்றி ‘டி’ வகை (Category D) ஆயுதங்களை எடுத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
எவராலும் முன்னெடுக்கப்படும் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என பிரான்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சுமார் மூன்று வார கால இடைவெளிக்குப் பின்னர், சாதகமான வானிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 1,000 தஞ்சம் கோருவோர்
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர். அதேவேளை, படகுகளில் ஏறும் பகுதிகளில் பல்வேறு பதற்றமான சம்பவங்களும் கத்திமுனை அச்சுறுத்தல்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

